×

மது கடத்தல் அதிகரிக்கும் அபாயம் காவல்நிலைய பணிக்கு செக்போஸ்ட் ஜீப்புகள்


விழுப்புரம், நவ. 28:  விழுப்புரம் மாவட்டத்தில் வெளிமாநிலத்திலிருந்து மதுகடத்தல், சாராயம் கடத்தி வருவதை தடுக்கும் வகையிலும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுத்திடும் வகையில் மதுவிலக்கு அமல்பிரிவு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மாநில எல்லையோரம் இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதற்காக தமிழகம்- புதுச்சேரி எல்லைப்பகுதிகளில் 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பலத்த சோதனைகளுக்குப்பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நடமாடும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு மது கடத்தல், சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து வருகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு மது கடத்தலை தடுத்திடும் வகையில் ஜீப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடி களில் நிற்காமல் செல்லும் வாகனங்கள் ஜீப்பில் சென்று மடக்கிப் பிடிப்பதற்கு ஏதுவாக இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பனையபுரம், கெங்கராம்பாளையம், பட்டானூர், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளுக்கு இந்த ஜீப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சோதனைச்சாவடிகளில் நிற்காமல் செல்லும் வாகனங்களை மடக்கிப்பிடித்து மது கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்தவே. ஆனால் இந்த வாகனங்கள் தற்போது மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டானூர் செக்போஸ்டுக்கு வழங்கப்பட்ட வாகனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு காவல்நிலையத்தி
லும், பனையபுரம் செக்போஸ்ட் வாகனம் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.தற்போது உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் நிலையில் அதிகளவு மது கடத்தல் நடக்க வாய்ப்பிருக்கும். தேர்தலில் போட்டியிடும் பலர் தற்போதே மதுபாட்டில் கடத்தி பதுக்கி வைப்பதில் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்த நேரத்தில் செக்போஸ்ட்டிற்கு வழங்கப்பட்ட வாகனங்கள் வேறுபணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் மதுகடத்தலை முற்றிலும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல்துறை தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் விழுப்புரம் மாவட்ட செக்போஸ்டில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனம் அம்மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் மாவட்ட காவல்துறையினருக்குள் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் நிலையில் செக்போஸ்டுகளுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...